பாலிவுட்டை கலக்கிய ஏ.ஆர். ரஹ்மான் இந்தித் திரையுலகம் மீது அதிர்ச்சிதரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்தி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த ரஹ்மானின் இசையே இப்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளதோ? என்னதான் நடக்கிறது பாலிவுட்டில்? என்ன ஆச்சு ரஹ்மானுக்கு?

தமிழ்த் திரையுலகின் இசைவானில் இளையராஜா எனும் ஒற்றைச் சூரியன் மட்டுமே உலா வந்து கொண்டிருந்த நேரத்தில் 1992 ஆம் ஆண்டு ஒரு நட்சத்திரம் மெல்ல எட்டிப் பார்த்தது. சூரியனின் ஒளியை விஞ்சி அந்த சின்ன நட்சத்திரத்தின் பிரகாசம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆம் தனது 26 ஆவது வயதில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ரோஜா படத்தின் பாடல்கள் தமிழ்,இந்தி என இரு மொழிகளிலும் ஹிட் அடித்தது. அப்போதிருந்து ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏறுமுகம் தான்.

ரோஜா படத்தின் வெற்றி தமிழ் திலையுலகை புரட்டிப் போட்டதோ இல்லையோ ஒட்டுமொத்த பாலிவுட்டின் கவனத்தையும் ரஹ்மான் என்னும் தமிழ் இசைக்கலைஞன் பக்கம் திருப்பியது. அப்போதிருந்து ரஹ்மானின் இசைக்கு, இந்தி திரையுலகமே ஆட்டம் போடத் தொடங்கியது. அப்போது முதல் இன்றுவரை இந்தியில் மட்டும் சுமார் 60 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார், ஏ.ஆர். ரஹ்மான். அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்கள் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் தமிழும், இந்தியும் மட்டுமே அவரின் சர்வதேச அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை.

என்னாச்சு இசைப்புயலுக்கு?
1992 முதல் 2000 வரை ரஹ்மான் இசையமைத்த அனைத்துப் படங்களுமே பிலிம்ஃபேர் விருதை வென்றுள்ளன. சிறந்த இசைக்கான தேசியவிருதை 6 முறை வென்ற பெருமைக்குரிய ஒரே இசையமைப்பாளர் ரஹ்மான் மட்டுமே. 2009ஆம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற இந்தி படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்றார், ஏ.ஆர். ரஹ்மான். முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் என இந்தியத் திரையுலகமே ரஹ்மானைக் கொண்டாடியது. இவை தவிர கோல்டன் குளோப், பாஃடே உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும், பல மாநில அரசுகளின் விருதுகளையும் தன் வசமாக்கியவர் ரஹ்மான். இந்தியத் திரைத்துறையின் சர்வதேச ஐகானாகவே மாறிப்போனார் ரஹ்மான். இப்படி ஏறுமுகமாக இருந்த ரஹ்மானின் இசைப்பயணத்தில் தற்போது ஒரு சிறிய சறுக்கல். தனக்கு இந்திப் படங்களில் வாய்ப்புக் கிடைப்பதை சிலர் தடுத்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், இசைப்புயல்.

எங்கே தொடங்கியது பிரச்னை?
சில தினங்களுக்கு முன்பு இந்தி திலையுலகின் பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டையே அதிரச் செய்ததோடு பல்வேறு சர்ச்சைகைளையும் கிளப்பி இருக்கிறது. சுஷாந்த் மரணத்திற்கு முன்பாக நடித்த கடைசி திரைப்படம் ‘தில் பேச்சாரே’ அந்தப் படத்தின் இசையமைப்பாளர் என்கிற முறையில் சுஷாந்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தார் ரஹ்மான். அதில் பாலிவுட் திரையுலகம் திறமையான ஒரு கலைஞரை இழந்துவிட்டதாகவும், சுஷாந்த் சிங்கை ஒருசிலர் புறக்கணிப்பதாகவும் பதிவிட்டிருந்த ரஹ்மான், அதேபோல் தானும் புறக்கணிக்கப்படுவதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக ரஹ்மான் அளித்த ஒரு பேட்டியில், மேலும் சில உண்மைகளை கூறியுள்ளார் அவர். அந்தப் பேட்டியில் தில் பேச்சாரே படத்தின் இயக்குநர் முகேஷ் சோப்ரா இந்தப்படத்திற்காக தன்னை அணுகியபோது இந்த வாய்ப்பை எனக்கு தரக்கூடாது என பலரும் வற்புறுத்தியதாக தெரிவித்தார். இது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. இதையடுத்து கொதித்தெழுந்த ரஹ்மானின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக களம் இறங்கினர்.

திரையுலகின் பல பிரபலங்களும் ரஹ்மானுக்கு ஆதரவு குரல் கொடுத்தனர். இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர், ரஹ்மானுக்கு ஆதரவாக ட்விட்டர் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் “உங்களுக்கு என்ன பிரச்னை தெரியுமா ரஹ்மான்? நீங்கள் ஆஸ்கர் வென்றுவிட்டீர்கள். பாலிவுட்டில் கையாள முடியாத திறமை உங்களிடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரஹ்மான் இழந்த பணத்தை, புகழை திருப்ப பெறமுடியும். ஆனால் இழந்த நேரத்தை திரும்பப் பெறமுடியாது என குறிப்பிட்டிருந்தார். ரஹ்மானின் இந்த பதில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ரஹ்மான் மீதான சர்ச்சைகள் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளாக சுற்றி வருகிறது. தனது பாடலை வேறு ஒருநபர் ரீமேக் செய்து வெளியிட்டதை கண்டித்ததிலிருந்து ரஹ்மான் மீது சிலர் சேற்றை வாரியிறைக்கத் தொடங்கினர். 2009 ஆம் ஆண்டு அபிஷேக்பச்சன் நடிப்பில் உருவான ‘டில்லி 6’ என்ற படத்திற்கு ரஹ்மான் தான் இசையமைப்பாளர். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மசக்கிளி’ என்ற பாடல் மொழிகளைக் கடந்து இந்தியா முழுவதும் ஹிட் அடித்தது.
இந்தப் பாடலை முணுமுணுக்காத ரசிகர்களே இல்லை. அந்தப் பாடலை சிலர் ரீமேக் செய்து ‘மசக்கிளி 2.0’ என வெளியிட்டார்கள். அந்தப் பாடலும் ஹிட் அடித்தது. இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த ரீமேக் விவகாரம் தொடர்பாக, பதில் அளித்த ரஹ்மான் “யாருடைய உழைப்பையும் திருடாமல் நேர்மையாக உருவாக்கப்பட்ட பாடல் இது என குறிப்பிட்டிருந்த அவர், கோபத்தை அடக்கத் தெரிந்தவனே சிறந்த மனிதன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ரஹ்மானின் இந்த பதில் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். அல்லது பாலிவுட்டை தமிழ் இசையமைப்பாளர் ஒருவர் ஆக்ரகிக்கலாமா? என்ற அங்கலாய்ப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். பாலிவுட்டின் இசைப்போக்கையே மாற்றியவர் ரஹ்மான் எனச் சொல்ல முடியாது. ஆனால் இந்தித் திரைப்படங்களின் இசைக்கோர்வையில், இன்னொரு பரிணாமத்தை உருவாக்கியர் ரஹ்மான் என்று கூறுவதில் தவறில்லை.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக பாலிவுட்டில் கோலோச்சி வரும் தமிழனை இந்திக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? என கேள்வி கேட்கவும் தோணுகிறது. இசை மொழிகளின் எல்லையைக் கடந்தது. அதைத்தான் ரஹ்மான் நிரூபித்திருக்கிறார். இதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.
குறிப்பாக ராவணன், பம்பாய், ரோஜா போன்ற தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற படங்களானாலும் தில்சே, ராஞ்சனா, தாள், ரங்கீலா போன்ற படங்களாகட்டும் மொழியின் ஆளுமையை விஞ்சி நிற்கிறது இசை. இந்த யதார்த்தத்தை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும். அதனால்தான் ரஹ்மான் இன்னும் வளர்ந்துவிடக் கூடாது என முட்டுக்கட்டைப் போடுகிறார்கள். ஆனால் நதிக்கு அணைபோடலாம். காட்டாற்று வெள்ளத்திற்கு கதவு போடமுடியாது என்பதை அந்த ‘சிலர்’ அறிந்திருக்கவில்லை.

ரஹ்மான் எட்டிய உயரங்கள் பல. அந்த நிழலில் இளைப்பாரியவர்கள் கூட ரஹ்மானை வீழ்த்த நினைக்கலாம். ஆனால் ஒன்று அது இசைப்புயல். அத்தனையையும் கபளீகரம் செய்யும் பேராற்றல் புயலுக்கு உண்டு. அப்படி புயல் அடித்தால் இந்தப் பதர்கள் சிதறிப்போகும்.

எத்தனையோ வெற்றியிலும் தோல்வியிலும் ரஹ்மான் புன்னகை முகத்துடன் ஒன்றே ஒன்றை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லுவார், ரஹ்மான். உங்களுக்குத் தெரியாதா? “எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே”
-சுரா