முழு ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள 6-ம் கட்ட ஊரடங்கில், ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த மாதத்தில் இரண்டாவது வாரமாக முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள், ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சியில் – ரூ.41.67 கோடி, சேலத்தில் – ரூ.41.20 கோடி, கோவையில் – ரூ.39.45 கோடி, சென்னையில் – ரூ.22.56 கோடிக்கும் மது விற்பனை ஆகி உள்ளது.
கடந்த வாரம் ரூ.188.86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.189.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.