1987’ம் ஆண்டு மார்ச் மாதம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.
அகமதாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை கவாஸ்கர் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இன்றைய காலகட்டத்தில் கவாஸ்கர் விளையாடியிருந்தால் மிக எளிதாக இன்னும் பல்லாயிரம் ரன்களை அவர் குவித்திருப்பார்” என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டியுள்ளாா்.

மேலும் அவர் கூறுகையில் ” கவாஸ்கரின் காலகட்டத்திலும் அதற்க்கு முன்பாகவும் பல ஜாம்பவான்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர், குறிப்பாக பிராட்மேன்,சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ், மியான்டட் போன்ற ஜாம்பவான்கள் விளையாடியிருந்தாலும் கவாஸ்கரால்தான் 10000 ரன்களை கடக்க முடிந்தது என்றும், சுனில் கவாஸ்கரின் 10000 ரன்கள் இன்றைய காலகட்டத்தில் 16000 ரன்களுக்கு சமமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
” அதிக ரன்கள் குவிப்பதற்கு சாதகமாகவே இன்றைய காலகட்டத்தில் பிட்சுகள் உருவாக்கபடுவதால் இன்றைய பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் குவிப்பதாகவும், கவாஸ்கர் காலகட்டத்தில் அப்படி இல்லை என்றும்” தனது யூ-டியூப் சேனலில் இன்சமாம் பதிவிட்டுள்ளார்.